சைக்கோ கொலைகாரன் யார்?

சென்னையில் கடந்த சில வாரங்களாக இரவுக் காவலாளிகள், மற்றும் தெருக்களில் தூங்குபவர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவது ஒரு திகில் கதையாக மாறிவிட்டது. இந்த திகில் கதையின் வசனங்களின் ஒரு பகுதி ஊடகங்களாலும் இன்னொரு பகுதி போலீஸாராலும் எழுதபட்டு வருகிறது. 'சைக்கோ கொலைகாரன்' என்ற ஒரு கற்பனை பாத்திரத்தைத் தேடி மொத்த நகரமும் அலைந்து கொண்டிருக்கிறது. குற்றத்தின் பின்னே இருக்கும் நோக்கங்கள் அல்லது ஆதாயங்கள் வெளிப்படையாகத் தெரியாத குற்றங்கள் அனைத்தும் உளவியல் சார்ந்த மர்மக் குற்றங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு 'சைக்கோ கொலைகார'னின் கதாபாத்திரம் இல்லாவிட்டால் குற்றம் குறித்த எல்லாக் கற்பிதங்களும் கலைந்துவிடும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி மொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்றதாக்கிவிடுகிறான். மிகக் கொடூரமான குற்றவாளி என்று அறியப்பட்ட ஒருவனது இலக்குகள் குறித்துக்கூட உத்தேசங்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் குற்றங்கள், அறியப்படாத நோக்கங்கள் கொண்ட குற்றங்கள் ஏற்படுத்தும் பதட்டம் மொத்த சமூகத்தையும் நோய்க்கூறு கொண்டதாக்கிவிடுகிறது. பீதியையும் பிறர்மீதான அச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் இனவாத மதவாத அமைப்புகளாகட்டும், ஊடகங்களாகட்டும் அவை ஒரு சமூகத் திரளுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகின்றன. இந்த உலகின் மிகப் பெரிய கொலைக் கருவி எதுவென்றால் அது அச்சம்தான். அச்சத்தினால் பிறழ்வு கொண்ட ஒரு தனிமனிதனின், சமூகத்தின் பிறருக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்த முடியாதவை.

 

இன்றைய தினகரன் நாளிதழில் (6.8.08) வெளிவந்திருக்கும் செய்தியின் சாரம் இது:

''சைக்கோ பீதியில் நள்ளிரவில் 6 அடி மனிதருக்கு அடி உதை. 15 தையல் போட்டு சிகிச்சை

சென்னை மதுரவாயல் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். சைக்கோ கொலையாளி பிடிபட்டதாக செய்தி பரவியதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 6 அடி உயரமுள்ள அந்த மனிதரிடம் யார் என்று விசாரித்ததற்கு அவர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்ததால் சென்னையில் நடந்த கொலைகளுக்கு காரணமான சைக்கோ அவர்தான் என்று நினைத்து கூச்சலிட்ட பொதுமக்கள் அவரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸாருடன் சென்ற சுமார் 50 பெண்கள், 'அவந்தான் சைக்கோ கொலையாளி, அவனை கைது செய்யுங்கள்' என்று கோஷங்கள் எழுப்பினர். தலையில் படுகாயம் அடைந்திருந்த அந்த நபரை மக்களிடமிருந்து காப்பாற்றி போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்த  நபரை கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்ததும் மதுரவாயல் நகராட்சித் தலைவர் ஆலப்பாக்கம் சண்முகத்தின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் போலீஸ் நிலையம் வந்தார். போலீசார் நகராட்சித் தலைவரிடம் 'அந்த நபர் சைக்கோவாக இருக்க வாய்ப்பில்லை' அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் தெரிகிறார். சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.''


இது சென்னையில் சமீபத்தில் பொதுமக்களால் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஒரு உதாரணம். சமீபத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்கூட இதுபோல் தாக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் ஊசிபோடுபவர் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில்  ஒரு இளைஞர் கொதிக்கும் தார்ச் சாலையில் பொதுமக்களால் தேய்த்துக் கொல்லபட்டார். மாந்த்ரீகர்கள், சூனியக்காரர்கள் என்ற சந்தேகத்தின் மர்மக் கொலையாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் பலமுறை நடந்திருக்கின்றன.

மேற்கண்ட தினகரன் செய்தியில் ஒரு துணைச் செய்தியுமிருக்கிறது. 'சந்தேகத்தின் பேரில் யாரையும் தாக்கக் கூடாது' என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். இந்தியாவிலேயே சந்தேகத்தின் பேரில் அன்றாடம் பொதுமக்களை தாக்குவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்றால் அது காவல் துறைதான். காவல் துறையின் மொத்த செயல்பாட்டின் பெரும் பகுதி இதுவே.
இன்னொருவிதத்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மக்கள் எடுத்துக் கொள்வதன் ஒரு பகுதியாகவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளைத் தாக்குவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மர்மக் கொலைகள் விஷயத்தில் காவல்துறை மிகுந்த பதட்டத்தில் இருக்கிறது. சைக்கோ கொலைகாரனை பார்த்ததாக சொன்ன இரண்டு இரவுக்
காவலாளிகள் வதந்திகளைப் பரப்பியதற்காக கைது செய்யப்பட்டார்கள். பலர் தொடர்ந்து விசாரணைக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். கிட்டத்தட்ட பொதுமக்களைப்போலவே போலீசும் நடந்துகொள்கிறது. வதந்திகளைப் பரப்புவது ஒரு குற்றம் என்றால் அத்தனை பத்திரிகைகளின் ஆசிரியர்கள், முதலாளிகளும் இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டியவர்கள். தடயமில்லாத ஒரு நிழலைத் தேடி இரவெல்லாம் அலைய வேண்டிய நிலையும் பரிதாபத்திற்குரியதுதான். அந்த வெறுப்பையே காவல்துறையினர் அப்பாவிகள் மேல் திருப்புகின்றனர்.

இந்தச் சம்பவம் பற்றி என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். 'இந்தக் கொலைகளை ஒருவரே செய்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தொடர்பில்லாத வெவ்வேறு நபர்கள் ஒரே மாதிரி கொலையை செய்வதும் சாத்தியம். பலவீனர்களை கொல்வதன் மூலம் கிடைக்கும் ரகசியமான த்ரில், இத்தகைய மர்மக் கொலைகள் மூலம் ஏற்படும் பரபரப்பு வேறு சிலரையும் அத்தகைய கொலைகளை செய்வதற்கு தூண்டுகோலாக அமையலாம். அல்லது சில தனிப்பட்ட விரோதத்திற்காக கொல்ல விரும்புகின்றவர்களும் இந்தச் சூழலை பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசியில் சம்பந்தமில்லாத யார் தலையிலாவது எல்லாக் குற்றங்களும் போடப்படலாம்.'

மனநலம் குன்றியவர்கள் அல்லது அன்னியர்களாக தெரிபவர்கள் தொடர்பாக பொதுமக்களிடையே நிலவும் கருத்தாக்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. மனப் பிறழ்வு கொண்டவர்கள், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் தொடர்பாக நிலவக்கூடிய குரூரமும் வெறுப்புமே இத்தகைய சம்பவங்களில் ஸ்தூல வடிவம் பெறுகின்றன. பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள், உடல் குறைபாடுகொண்டவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் ஆழ்ந்த வெறுப்பே அவர்களை குற்றவாளிகளாக கற்பிதம் செய்து தண்டிக்கத் தூண்டுகிறது. தன்னிலையற்று தெருக்களில் திரியும் ஒருவர் தடயங்கள் ஏதுமற்ற வகையில் இத்தகைய தொடர் கொலைகளை செய்வது சாத்தியமல்ல என்பதை இந்த பொதுப் புத்தி அறிவதில்லை. மேலும் 'சைக்கோ' எனப்படும் ஒருவர் வினோதமான அன்னிய தோற்றத்துடன் சாலைகளில் சந்தேகத்திற்கிடமாக அலைய வேண்டும் என்பதில்லை. அவர் காரில் வந்து கொலைகளை செய்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு கனவானாகவோ, மென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு இளைஞனாகவோ, ஒரு தீவிர பக்தராகவோ, ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஏன் ஒரு தமிழ் எழுத்தாளனாகவோ கூட இருப்பது சாத்தியம்தான். ஆனால் சட்டம் மட்டுமல்ல பொதுமக்களின் சந்தேகத்திற்குள்ளும் இவர்கள் வருவதில்லை. அந்த வகையில் சைக்கோ கொலைகாரன் என்பது பொதுப் புத்தியில் உள்ள ஒரு எதிர்மறை பிம்பம். பலவீனர்கள், பிறழ்வு கொண்டவர்களுக்கு எதிரான பிம்பம். இந்த பிம்பம் பொது மக்களால் மேற்கொள்ளப்படும் கூட்டுக் குற்றங்களுக்கு பெரிதும் துணை நிற்கிறது. அந்த வகையில் மொத்த சமூகமுமே ஒரு பைத்திய நிலைக்கு தள்ளப்படுகிறது. இன, மத, சாதி கலவரங்கள், அரசியல் போராட்டங்களிலும் இந்த பைத்திய நிலையே முகமற்ற எதிரிக்கு எதிராக ஒரு பொதுப் படிமத்தின் வழியே செலுத்தப்படுகிறது

 

ஊடகங்களால் பெரிதும் கவனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது பொதுமக்களின் ஆவேசம் இந்த இந்தப் பைத்திய நிலைக்கு ஒரு சரியான உதாரணம். சில மாதங்களுக்கு முன் திருடன் என்று கருதிய ஒருவனை பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனத்தோடு பிணைத்து தரதரவென்று இழுத்துச் சென்ற காட்சியை திரும்பத் திரும்ப பார்த்தோம். போலீஸ் அல்லது நீதித் துறை மற்றும் காவல்துறைமீது மக்கள் நம்பிக்கை இழப்பதாலேயே மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்ற  சமூகவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது கொஞ்சம் மேலோட்டமான பொதுப் பார்வை என்றே தோன்றுகிறது. தங்கள் பகுதியில் மாமூல் வாங்கும் ஒரு ரெளடி, அராஜகம் செய்யும் ஒரு போலீஸ்காரன், லஞ்ச ஊழலில் திளைக்கும் ஒரு அரசு அதிகாரி அல்லது அரசியல்வாதிக்கு எதிராக அவர்களது குற்றங்கள் எவ்வளவு வெளிப்படையாக இருந்தாலும் மக்கள் ஒன்று திரள்வதில்லை. மாறாக தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள், ஊடகங்கள் வழியே பூதாகரப்படுத்தப் பட்டவர்கள், எதிர்த்து தாக்குதல் நடத்த முடியாதவர்கள் கையில் சிக்கும்போது அவர்களை தண்டிப்பதே பிறழ்வு கொண்ட மக்கள் திரளின் வழிமுறையாக இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் சமூக பயம், சமூக மதிப்பீடுகள், சமூக பிறழ்வுகள் கூட்டுக் குற்றங்கள் தொடர்பான புதிய கேள்விகளுக்கு இட்டுச் செல்கின்றன.

இந்திய சமூக அமைப்பில் அரசியல்வாதிகள், சமூகவிரோதிகள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் போல் பொதுமக்களும் ஆபத்தானவர்களாக மாறிவருகின்றனர்.

 

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com